Wednesday, June 23, 2010

அழகிய முன்மாதிரியாகத் திகழும் உஸ்வத்துன் ஹஸனா

அழகிய முன்மாதிரியாகத் திகழும் உஸ்வத்துன் ஹஸனா

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 50,000 –க்கும் அதிகமானோர் வசிக்கும் கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் செயல்படும் முஸ்லிம் கல்விச்சங்கம் முஸ்லிம் மகளிர் முன்னேற்றத்துக்கென சிறப்பான தொரு கல்வி சேவையைச் செய்து வருகிறது.

பெண்கள் அனைவரும் கல்வி ஒளிபெற்று அறியாமை இருளகற்றி அவனியில் உயர்வு பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் பள்ளபட்டி வாழ் பாரி வள்ளல்கள், கல்வி சிந்தனையாளர்கள் ஒன்றிணைந்து 1974-ம் ஆண்டில் உஸ்வத்துன் ஹஸனா நடுநிலைப் பள்ளியினை மதுரை ஹாஜியா நல்லாசிரியர் கே. கமருன்னிஸாவை முதல்வராகக் கொண்டு துவக்கினர்.

‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பதற்கிணங்க எண்ணத்தால் உயர்ந்து நிற்கும் பள்ளபட்டி முஸ்லிம் கல்விச் சங்க நிர்வாகத்தின் கீழ்

உஸ்வத்துன் ஹஸனா மழலையர்பள்ளி (1975 – 76)
உஸ்வத்துன் ஹஸனா ஓரியண்டல் அரபிக் மகளிர் ( 1976 – 77)
மேல்நிலைப்பள்ளி
உஸ்வத்துன் ஹஸனா தொடக்கப்பள்ளி (1973)
உஸ்வத்துன் ஹஸனா உண்டுறை விடுதி (1978)
உஸ்வத்துன் ஹஸனா மேல்நிலைப்பள்ளி (ஆங்கில வழி (1985)
உஸ்வத்துன் ஹஸனா ஆதரவற்ற முஸ்லிம் மகளிர் நலன்
காப்பகம் (1987)
உஸ்வத்துன் ஹஸனா ஓரியண்டல் அப்ஸலுல் உலமா
அரபிக் கல்லூரி (1990 – 91)
ஜாமியா உஸ்வத்துன் ஹஸனா ஆண்கள் அரபிக்கல்லூரி (1991 – 92)
ஆகிய கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

அரபிக் கல்லூரியில் 115 மாணவியர், மேல்நிலைப்பள்ளியில் 1646, தொடக்கப்பள்ளியில் 694, மழலையர் பள்ளியில் 305 என மொத்தம் 2750 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களில் உஸ்வத்துன் ஹஸனா ஆதரவற்ற முஸ்லிம் மகளிர் நலன் காப்பகம் மூலம் கல்வி உதவி பெறுவோர் மட்டுமே 1180 பேர், மாணவியரின் நோட்டுப் புத்தகங்கள், இலவச சீருடைகள், சத்துணவு என ஆண்டுக்கு மொத்தம் ரூ.7 லட்சம் செலவிடப்படுகிறது.

அரசு அங்கீகாரப் பணியிடத்தில் 50 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் பள்ளபட்டியைச் சேர்ந்த மகளிருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் கல்லூரி, மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, மழலையர் பள்ளி ஆகியவற்றில் 54 பேர் நிர்வாகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

பள்ளிக் கல்வியை முடித்த மகளிர் பொருளாதார முன்னேற்றம் அடைய, அவர்களுக்கென ஒரு ‘சுய தொழில்’ தேவை எனச் சிந்தித்த இச்சங்கம், மகளிருக்கு தையற் பயிற்சி, எம்பிராய்டரி, கூடை பின்னுதல், அலங்கார கைவினைப் பொருள்கள் தயாரித்தல், கம்ப்யூட்டர் பயிற்சி போன்ற தொழிற் பயிற்சிகளையும் அளித்து வருகிறது.

இதுவரை 412 தையல் இயந்திரங்கள், 23 எம்பிராய்டரி தையல் இயந்திரங்களை இலவசமாக வழங்கியுள்ளது. 50 மாணவிகளுக்கு கவுன், பர்மிடாஸ் தயார் செய்யும் வேலை வாய்ப்பும் கொடுத்து ஒரு நாளைக்கு ரூ.100 வரை ஊதியம் பெறுகின்றனர்.

மாணவிகளின் மேற்படிப்பு, மருத்துவ சிகிச்சை இவற்றிற்கு பணமில்லாமல் அவதிப்படுவோருக்கு உதவ ‘வட்டியில்லா நகைக்கடன்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது இச்சங்கம். அதற்காக ‘அல் உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் ஃபண்ட் டிரஸ்ட்’ என்னும் வங்கி அமைப்பைத் தொடங்கி, வட்டியில்லாமல் நகையின் மதிப்பில் 60 சதத்துக்கு கடன் வழங்கப்படுகிறது.

பள்ளப்பட்டியைச் சார்ந்த 26 வயது வரை திருமணம் ஆகாமல் இருந்த பெண்கள் 30 பேருக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் திருமண உதவியாக வழங்கப்பட்டுள்ளன.

இக்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகள் கல்வி, பொருளாதார முன்னேற்றமடைவதுடன் ‘தனித்திறன்’ பலவற்றில் முன் மாதிரிகளாகத் திகழ்கின்றனர்.

10, +2 அரசு பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி.
10, +2 அரசு பொதுத் தேர்வுகளில் அரபி, தாவரவியல், விலங்கியல், ஆடை வடிவமைப்பும், அலங்காரமும் என்று பல பாடங்களில் தொடர்ந்து மாநிலத் தரம் (State Rank)

பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் மாநில அளவில் பரிசுகள். குறிப்பாக ‘அண்ணா நூற்றாண்டு விழா’ கவிதை ஒப்புவித்தல் போட்டி மற்றும் ‘இதயத்தைத் தந்து விடு அண்ணா’ என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய கவிதை ஒப்புவித்தல் போட்டி இவைகளில் மாநிலப் பரிசுகள்.

துவக்கப்பள்ளி ‘மாவட்டத்தில் சிறந்த பள்ளி’ - என்ற விருது.
சென்ட்ரல் வஃக்பு போர்டு அளித்த ‘The Best Muslim School of Tamilnadu’ என்ற பாராட்டு.
துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியைகளுக்கு ‘டாக்டர் இராதா கிருஷ்ணன் விருது’கள்.

கல்வி அதிகாரிகளின் பாராட்டுக்கள்

இவை சில உதாரணங்கள்

ஏழை மாணவிகள் மருத்துவம், பொறியியல், ஆசிரியப் பயிற்சி முதலிய உயர்கல்வி கற்க, பொருளாதார உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் முஸ்லிம் பெண் மருத்துவர்களும், பொறியியல் வல்லுனர்களும், ஆசிரியைகளும் உருவாகி இஸ்லாமிய சமுதாயத்தின் கரங்களை வலுப்படுத்தி வருகின்றனர்.

பள்ளப்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் பெண்கள் கல்லூரி இல்லாததால் பள்ளப்பட்டி மக்களின் ‘கனவுத் திட்டமான’ மகளிர் கல்லூரியினை விரைவில் துவக்கிட கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க இஸ்லாமிய மார்க்கப் பேணுதல் அமைப்பில் கல்லூரி செயல்படும். ‘Islamic Cultural Studies’ என்ற பாடப் பிரிவுகளும் இடம் பெறும்.

இஸ்லாமிய பெண்களைக் கல்வி, ஒழுக்கம், பொருளாதாரம், நாட்டுப்பற்று, ஆன்மீகம், அறிவியல் ஞானம் என்று பல வழிகளிலும் மேம்படுத்தும் வகையில் ‘உஸ்வத்துன் ஹஸனா மாமாஞ்சி ஹாஜி அப்துல் லத்தீப் மகளிர் கல்லூரி’ அமையும். இக்கல்லூரியின் வளர்ச்சிக்காக அனைவரின் துஆக்களையும் நாடுகிறோம்.

நன்றி : மணிச்சுடர் ( 08/09 ஜுன் 2010 )

Monday, June 21, 2010

என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை

என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை

சென்னை, ஜுன்.18-
என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்க உள்ளது.
இதுகுறித்து சிறுபான்மையினர் நல ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கல்வி உதவித்தொகை
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை கடந்த 2007-ஆம் ஆண்டில் இருந்து சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் முதலிய மதத்தை சேர்ந்த பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்கவேண்டும்.
குறைந்த பட்சம் பிளஸ்-2 தேர்வில் 50 சதவீத மார்க் எடுத்திருக்க வேண்டும்.
ரூ.20 ஆயிரம்
படிப்பு கட்டணம் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் மற்றும் விடுதி கட்டணம் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விடுதியில் இல்லாத மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.500 கொடுக்கப்படும். கடந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்கள் ஜுலை 26-ந்தேதிக்குள்ளும், புதிய மாணவர்கள் ஆகஸ்டு 10-ந்தேதிக்குள்ளும் அவர்கள் சேர்ந்துள்ள கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.
கல்வி நிலையங்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து விவரத்துடன் சிறுபான்மையினர் நல ஆணையர், 807, 5-வது தளம், அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு ஜுலை 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். அதே முகவரிக்கு புதிய விண்ணப்பங்களை கல்விநிலையங்கள் 13-8-2010 தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
இதுகுறித்த விவரங்களை www.minorityaffairs.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Tuesday, June 1, 2010

S.S.L.C. , +2 , 10th மெட்ரிகுலேஷன் மாணவிகள் கவனத்திற்கு

S.S.L.C. , +2 , 10th மெட்ரிகுலேஷன் மாணவிகள் கவனத்திற்கு

அல்ஹாஜ். Dr. A. ஜமீர் பாஷா – ஷகீலா தம்பதிகள்,
அல்ஹாஜ். Dr M.S. அஷ்ரஃப் – ஹாஜியா ஜீனத் தம்பதிகள்,
அல்ஹாஜ். H.Q. நஜ்முதீன் – ஹாஜியா சையது பாத்திமா தம்பதிகள்,
அல்ஹாஜ். A. பஷீர் அஹ்மத் – ஹாஜியா அப்ரோஜாகனி தம்பதிகள்,

வழமை போல் இவ்வருடமும் S.S.L.C.,+2,10th மெட்ரிகுலேஷன் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முஸ்லிம் மாணவிகளுக்கு ‘நர்கிஸ்’ சார்பில் பரிசுகளை வழங்கி பாராட்ட இருக்கிறார்கள்.

+2 தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள், ஜூன் 1-ம் தேதிக்குள், S.S.L.C. – மெட்ரிகுலேஷன் மாணவிகள் ஜூன் 15-ம் தேதிக்குள் தங்களது மதிப்பெண் பட்டியல் ஜிராக்ஸும் கைப்பட எழுதிய கடிதம், வீட்டு முகவரி, தொலைபேசி எண், 1 புகைப்படம், ரிப்ளை கவர் இணைத்து நர்கிஸ் முகவரிக்கு அனுப்பித் தர வேண்டும்.

S.S.L.C., +2, மெட்ரிகுலேஷன் மாணவிகள் பரிசு என்று கவரில் குறிப்பிடவும். நர்கிஸ் சந்தாதாரர் என்றால் சந்தா எண் தரவும். சந்தா தாராக இல்லாவிட்டாலும் கட்டாயம் தகவல் தரவும்.

M. அனீஸ் ஃபாத்திமா ( ஆசிரியை ‘நர்கிஸ்’)

54, மரியம் நகர், மல்லிகைபுரம், திருச்சி – 1.