Tuesday, November 6, 2007

சாதனையாளர் சலாஹ¤த்தீன் காக்கா




சாதனையாளர் சலாஹ¤த்தீன் காக்கா

நர்கிஸ் பிப்ரவரி இதழ் அச்சுக்குள் நுழையும் தருவாயில் வெளிநாட்டுவாழ் இந்தியர் சாதனையாளர் விருதான "பிரவாசி பாரதீய சம்மான்" உலகப் புகழ்பெற்ற ஈடிஏ அஸ்கான் மற்றும் ஸ்டார் பன்னாட்டுத் தொழிற்குழுமத்தின் மேலாண்மைத்தலைவர் கீழக்கரை தந்த செல்வப்புதல்வர் அல்ஹாஜ் செய்யது சலாஹ¤த்தீன் காக்கா அவர்களுக்கு வழங்கப்பட்ட செய்தி நமக்குக் கிடைத்தது. அதை நர்கிஸ் பதில்கள் பகுதியில் பதிவு செய்து மகிழ்ந்தோம்.

35 ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறு கட்டுமானக் கம்பெனியாகத் தொடங்கப்பட்டு இன்று சுமார் மூன்றரை பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பன்னோக்கு -பன்னாட்டு -பன்முகத் தொழில் சாம்ராஜ்யமாக உயர்ந்து நிற்கிற - உலகம் முழுக்க 21 நாடுகளில் 45000 தொழிலாளர்களை உள்ளடக்கிய (35000 இந்தியர்கள்; பெரும்பாலோர் தமிழர்கள்) மிகப் பெரிய ஒரு தொழிற்குழுமத்தலைவர் என்ற பந்தா எதுவுமின்றி "இது என் தலைமையில் பணிபுரியும் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் கடின உழைப்புக்கும் கிடைத்த விருது; அதனை நான் அவர்கள் சார்பிலேயே பெற்றுக்கொள்கிறேன்" என்று அடக்கத்துடன் அறிவித்து தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தினார் காக்கா அவர்கள்.

இந்த வார்த்தைகள் ஏதோ மரியாதை நிமித்தம் சொல்லப்பட்டவை அல்ல என்பதை அவரை அறிந்த அனைவரும் - குறிப்பாக , அவரது தலைமையின்கீழ் பணியாற்றும் அத்தனை சகாக்களும் ஈடிஏ அஸ்கான் தொழிற் குடும்பத்தின் அனைத்துமட்டத் தொழிலாளர்களும் அறிவார்கள்.

அதிகம் பேசாத ஆனால் ஒவ்வொரு அடியையும் அளந்து எடுத்துவைக்கும் அதிபுத்திசாலி அவர்கள். அக்குழுமத்தின் ஒவ்வொரு பிரிவிலும் பணியாற்றும் தொழிலாளியும் ஒரு அசாதாரண மன நிறைவுடன் பணியாற்றுவதைப் பார்த்து நாம் பெரிதும் வியந்திருக்கிறோம். அந்த நிம்மதியின் உண்மையான அடிப்படை, கடின உழைப்பாளிகளான அவர்களுக்கு தகுந்த ஊதியத்துடன் வாழ்விட அடிப்படை வசதிகளையும் வணக்க வழிபாடுகளுக்கான வழிவகைகளையும் மிக நுட்பமான உத்தியுடன் செய்து கொடுத்திருக்கும் மனிதாபிமான உந்துதல்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

பலநாடுகளில் -குறிப்பாக மத்திய கிழக்கில் - கடைநிலை ஊழியர்களுக்கான வாழ்விடச் சூழ்நிலைகளின் பரிதாப நிலையை நேரில் பார்த்து -மனம்பதறிய -அவற்றை ஆய்வுப் பதிவுகளாக்கிய அனுபவமுள்ள நமக்கு ஈடிஏ அஸ்கான் குழும தொழிலாளர் வாழ்விடச் சூழ்நிலைகள் தந்த நிறைவுதான் - அதன் தொழிலாளர்களின் முகத்திலும் அகத்திலும் நம்மால் பார்க்கமுடிந்த ஆசுவாசம்தான் அக்குழுமத்தின் அமோக வெற்றிக்கு அடித்தளம் என்பதை இங்கே சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்!

எனவே, நம் வியப்பும் மகிழ்ச்சியும் நம்மை அத்தொழிற்குடும்பத்தின் நிர்வாகத்தலைவரான சலாஹ¤த்தீன் காக்கா அவர்கள் பால் அளப்பெரிய -அரிய மரியாதையை ஏற்படுத்தியது என்பதையும் கடமை உணர்வுடன் பதிவுசெய்தாக வேண்டிய காட்டாயத்தை ஏற்படுத்துகின்றன. ஓரிரு வார்த்தைகளில் சொல்வதானால், ஈடிஏ அஸ்கானின் தொழிற்சூழல் அனைத்துத் தொழில்முனைப்பாளர்களும் பார்த்துப் பயிலவேண்டிய ஒரு முன்னுதாரணத் தொழிற்சூழலாகும் (Examplary Business / Industrial environment).

சலாஹ¤த்தீன் காக்கா அவர்களின் தொழில்முனைப்பு ஊக்கம் அந்த இடத்திலே மட்டும் கால்கொண்டு நின்றுவிடவில்லை. அது துபையின் "ஈமான்" மூலம் பரந்த கல்விப் பணியில் - சமுதாயக் களப்பணியில் வலுவாகக் காலூன்றி வளர்ந்து வருகிறது. அவர்களது கல்விப் பணியின் முதிர்ச்சியாக BITS Pilani , Manipal Academy of Higher Education , Dubai இன்று சான்றாக நிற்கின்றன.


நோன்பு காலங்களில் துபையில் 4000 -க்கும் அதிமான மக்கள் ஓரிடத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து ஏற்பாடு செய்து அமீரகத்தின் ஒட்டுமொத்தப் பார்வையையும் தன் பக்கம் திருப்பிய உன்னதம் அவர்களது இன்னொரு சாதனை!

வினாடி இடைவெளி இல்லாத பணிச்சுமைக்கு மத்தியிலும் பரபரப்பில்லாத உணர்வு வெளிப்பாட்டில் மென்மையான பேச்சு , ஊன்றிக் கவனிக்கும் உபாயம், வெளிப்படையான கருத்துரைப்பு, வேஷம் போடாத விருந்தோம்பல் பண்பாடு அனைத்தையும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்!

இந்த வேளையில் தன் உறவினர் சலாஹ¤த்தீன் அவர்களின் ஆற்றலை -தொழில் மேலாண்மைத் திறனை ஆரம்பத்திலேயே எடை போட்டு உரிய இடத்தில் அமர்த்திய தொழில் மேதை -கல்வித்தந்தை அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. காக்கா அவர்களின் முன்னோக்குத் திறனையும் எண்ணி வியக்கிறோம்.

இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் இவ்வரிய விருதினை சலாஹ¤த்தீன் காக்கா அவர்களுக்கு வழங்கியபோது தனிப்பட்ட முறையில் எத்தகைய மகிழ்ச்சிக்கு ஆளாகியிருப்பார் என்பதை எண்ணிப் பார்க்கிறோம்.

இந்திய உபகண்டத்தின் தென்கோடி முனையில் ஒரு சாமான்யக் குடும்பத்தில் பிறந்து - கடின உழைப்பில் படிப்படியாக உயர்ந்து அறிவியல் உலகத்தைத் தன்னைநோக்கித் திரும்பிப்பார்க்கவைத்தவர் அவர்.

தன்னைப்போலவே தன் மண்ணிலே பிறந்து வளர்ந்த இன்னொரு சகோதரன் தன் தொழில்மேலாண்மைத் தீட்சண்யத்தால் -திறத்தால் இன்று உலகம் உற்று நோக்கும் ஓர் உன்னத நிலைக்கு உயர்ந்திருப்பதையும் , அவருக்கு இந்திய முதல்மகனாக நின்று தன் கையால் விருது வழங்கி கௌரவிப்பதையும் எவ்வளவு உணர்வுப்பூர்வமாக அனுபவித்திருப்பார் என்பதை நாம் அசைபோட்டு, இதற்குக் காரணமான இறைவனுக்கு நன்றி சொல்கிறோம்!

நிர்வாக மேலாண்மைக் கல்வி இன்று பல பரிமாணங்களை எட்டியிருக்கிறது. ஆனால் அன்று அது ஓர் அரிய பொருள். இருந்தும் காக்கா அவர்கள் இறைவனின் பேரருளாலும், தமது நுண்ணறிவு - விடாமுயற்சி மற்றும் தைரியமிக்க அணுகுமுறைகளாலும் தமது தொழில் முயற்சியில் அசாதாரண உச்சத்தை எட்டியிருக்கிறார்கள். இவை அடுத்த தலைமுறைக்குப் பாடமாக வேண்டும் ; பாடமாக்கப் பட வேண்டும் . அதனால் அவர்கள் தங்களது தொழில்முனைப்பு -மேலாண்மை அனுபவங்களைத் தக்காரை வைத்து பதிவு செய்து நூலாக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறோம்.

அல்லாஹ் காக்கா அவர்களுக்கு நீடித்த ஆயுளையும் நெடிய சேவையையும் பயன்பட வாழ்தலின் பரிபூரணத்தையும் மேலும் மேலும் அளித்து கண்ணியப் படுத்துவானாக, ஆமீன்!

DR HIMANASYED

தலையங்கம் - மார்ச் - 2007
NARGIS
Muslim Woment Monthly

1 comment:

Unknown said...

wow it is grate

please go vist our web

visit www.TamilKudumbam.com

(தமிழ்குடும்பம்.காம்) This is a simple website with lots of information on Veg, non-veg cooking (with photos) and several other hobbies for the family. This is a recently opened website and it is growing day by day.