Thursday, May 29, 2008
துபாய் ஈமான் அமைப்பு இந்திய துணைத்தூதரக அதிகாரிக்கு நடத்திய பிரிவு உபசார விழா
துபாய் ஈமான் அமைப்பு இந்திய துணைத்தூதரக அதிகாரிக்கு நடத்திய பிரிவு உபசார விழா
ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூகப்பணிகளில் முத்திரை பதித்து வரும் துபாய் ஈமான் சங்கம் துபாய் இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் கன்சல் ( லேபர் & வெல்ஃபேர் ) திருமிகு பி.எஸ். முபாரக் அவர்களுக்கு பிரிவு உபசார விழா 29.05.2008 வியாழக்கிழமை மாலை துபாய் ஸலாஹுத்தீன் சாலையில் அமைந்துள்ள ஸ்டார் மெட்ரோ ஹோட்டலில் நடைபெற்றது.
ஈமான் சங்கத்தின் கல்விக்குழுத் தலைவரும், ஈடிஏ அஸ்கான் இணை நிர்வாக இயக்குநருமான் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் தலைமை தாங்கினார். துவக்கமாக இறைவசனங்களை ஈமான் சங்க துணைத்தலைவர் கவிஞர் அப்துல் கத்தீம் ஓதினார். பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஈமான் அமைப்பின் கல்விக்குழு தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் அவர்கள் தனது தலைமையுரையில் கன்சல் பி.எஸ். முபாரக் தொழிலாளர் நலனில் ஆற்றி வரும் சேவையைப் பாராட்டினார். அவரது பணிகள் சிறப்புற வாழ்த்தினார். ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்விச்சேவைகளை விவரித்தார்.
ஈமான் சங்க துணைத்தலைவர் முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் தனது துவக்கவுரையில் சமூக அக்கறையுடன் கடந்த இரண்டரை ஆண்டுகளாக துபாயில் இந்திய மக்களுக்கு சேவைபுரிந்த கன்சல் பி.எஸ். முபாரக் அவர்களைப் பாராட்டினார். எல்லோருக்கும் உதவிட வேண்டும் எனும் குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் இவரைப் போன்ற அதிகாரிகள் அனைத்துத் துறைகளிலும் இருந்தால் மக்களது தேவைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமீரகம் வருகை புரிந்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இந்திய கன்சல் ஜெனரல் மற்றும் கன்சல் பி.எஸ். முபாரக் உள்ளிட்டோரைச் சந்தித்து இந்திய மக்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் கேட்டறிந்தார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக அமீரகத்தில் மரணமடையும் இந்தியத் தொழிலாளர்களது உடல்கள் மட்டுமே இந்தியன் ஏர்லைன்ஸ் மூலம் இலவசமாக அனுப்பப்பட்டு வந்தது. பேராசிரியரின் கோரிக்கையை ஏற்று மூன்றே தினங்களில் இறந்த உடலுடன் உதவிக்காக ஒரு நபருக்கும் செல்ல அனுமதி பெருவதற்கு கன்சல் முபாரக்கின் பங்கு மிகவும் முக்கியமானது.
மேலும் இந்தியாவில் திருச்சியில் கொடுக்கப்படும் பாஸ்போர்ட்கள் மட்டும் துபாயில் புதுப்பிப்பதற்கு மிகவும் காலதாமதமாவதற்கு அங்கிருந்து உடனடியான பதில் கிடைக்கப்பெறுவதில்லை. இதனையும் பேராசிரியரின் கவனத்துக்கு கொண்டு சென்ற கன்சல் ஜெனரல் இதுபோன்ற தாமதம் ஏற்படாமல் இருப்பதற்கு அரசின் மூலம் முயற்சி மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்ததையும் நினைவு கூர்ந்தார்.
அமீரக அரசு அறிவித்த பொது மன்னிப்பு, தொழிலாளர் முகாமில் ஏற்படும் குறைகள் உள்ளிட்ட பல்வேறு காரியங்களில் கன்சல் பி.எஸ்.முபாரக் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. ஜெத்தாவிற்கு இந்திய ஹஜ் கன்சலாக பொறுப்பேற்க இருக்கும் அவருக்கு ஈமான் அமைப்பின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ஈமான் அமைப்பின் கல்விக்குழு செயலாளர் கும்பகோணம் ஏ. முஹம்மது தாஹா அவர்கள் தனது உரையில் கன்சல் பி.எஸ். முபாரக் அவர்கள் இந்திய தொழிலாளர்களின் மீது அக்கறை கொண்டு அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைத் துடைத்தெறிவதில் மிகவும் முக்கியப்பங்காற்றி வருவதை நினைவு கூர்ந்தார்.
திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், துபாய் தமிழ்ச்சங்க தலைவர் சபேசன், சிவ் ஸ்டார் பவன் கோவிந்தராஜ், அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அஜ்மான் மூர்த்தி, அமீரக தமிழ் மன்ற நிர்வாகி ஆசிஃப் மீரான், உம்முல் குவைன் தமிழ் மன்ற நிர்வாகி அப்துல் காதர் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
ஈமான் அமைப்பின் சார்பில் கன்சல் பி.எஸ். முபாரக்கிற்கு பொன்னாடையினை தொழிலதிபர் நாகூர் ஷேக் தாவுத்தும், நினைவுப்பரிசை கல்விக்குழுத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் அவர்களும் வழங்கினர்.
ஏற்புரை நிகழ்த்திய கன்சல் பி.எஸ். முபாரக் தனது ஏற்புரையில் ஈமான் சஙகம் இந்திய மக்களுக்கு சேவை புரிவதற்காக ஒரு நபரை முழுமையாக தூதரக பணிகளுக்கு உதவியாக வழங்கியுள்ளதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார். மேலும் பொதுமன்னிப்பு, உள்ளிட்ட பல்வேறு சேவைகளின் போது ஈமான் அமைப்பின் உறுதுணை மிகவும் போற்றத்தக்கது என்றார். தமிழர்கள் இருவர்கள் அமீரக பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த போது அவர்களை அமீரக ஆட்சியாளர் அலுவலகத்தில் அணுகி அவர்கள் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்ட நிகழ்வினை நினைவு கூர்ந்தார். இதுபோல் எண்ணற்றவர்கள் தாங்கள் செய்யாத குற்றத்திற்காக சிறையினுள், மருத்துவமனைகளில் இருந்து வருகின்றனர். இவர்களை மீட்டு தாயகத்திற்கு அனுப்பி வரும் சேவையில் ஈமான் அமைப்பு மிகவும் உறுதுணையாய் இருந்து வருகிறது. இதேபோல் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கி வருவதற்கு நன்றி தெரிவித்தார். இறைவனின் உதவியால் எனது பணிகளை திருப்தியுடன் நிறைவேற்றினேன். இதற்கு ஈமான் சங்கம் உள்ளிட்ட பலரது ஒத்துழைப்பே காரணம். ஒரு குடும்ப நிகழ்வில் கலந்து கொண்டது போன்ற ஒரு திருப்தியை எனக்கு அளித்துள்ளது இத்தருணம்.
ஈமான் சங்க ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சமுதாயப் புரவலர்கள் கீழக்கரை சாதிக் காக்கா, கீழக்கரை சம்சுதீன் காக்கா, பல்வேறு ஜமாஅத் நிர்வாகிகள், பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பில் நிர்வாகிகள் கீழக்கரை ஹமீது யாசின், மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் : ஈமான் அமைப்பின் ஊடகத்துறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment