Monday, August 11, 2008

துபை ஈமான் அமைப்பு நடத்திய வாழ்த்தரங்கம்

PRAVASI BHARATIYA SAMMAN விருது பெற்ற
ETA ASCON நிர்வாக இயக்குநருக்கு
துபை ஈமான் அமைப்பு நடத்திய வாழ்த்தரங்கம்



துபை ஈமான் அமைப்பு மிகச் சிறந்த வெளிநாடு வாழ் இந்தியக்குடிமகனுக்கான PRAVASI BHARATIYA SAMMAN விருதை இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற ETA ASCON குழுமங்களின் நிர்வாக மேலாண்மை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவருமான அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤த்தீன் அவர்களுக்கு வாழ்த்தரங்கை 01.03.2007 வியாழன் மாலை துபை தேரா பகுதியில் அமையப்பெற்ற குவைத் பள்ளியில் ( லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் ) அரங்கேற்றியது.

துவக்கமாக மெளலவி அப்துல் மாலிக் அரூஸி இறைவசனங்களை ஓதினார். ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் எம் அப்துல் ரஹ்மான் வாழ்த்தரங்கம் நடத்தப்படுவதன் நோக்கம் குறித்து விவரித்தார். மிகச்சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்க்கான விருது பெற்றதும் ஸலாஹ¤த்தீன் காக்கா அவர்கள் இவ்விருது தனக்கு மட்டும் கிடைத்த விருதல்ல. தனது நிறுவனத்தில் பணிபுரியும் 45,000 பேர்களுக்கும் கிடைத்த விருது என்று கூறி தனது பெருந்தன்மையுடன் வெளிப்படுத்திய நிகழ்வை நினைவு கூர்ந்தார். அத்தகைய பெருமையுடையவர்க்கு மிகப்பெரிய அரங்கில் விழா நடத்த ஆவல் கொண்டு காக்காவை அணுகிய போது இறைவனின் இல்லமான பள்ளிவாசலிலேயே மிகவும் எளிமையாக நடத்தப்படுவதையே தான் விரும்புவதாகக் கூறியதையடுத்து இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார். காக்கா அவர்கள் கல்வி, சமூக, சமுதாயப் பணிகளுக்காக செய்து வரும் உதவிகள் குறித்தும் விவரித்தார்.

ஏகத்துவ மெய்ஞான சபையின் தலைவர் பொறியாளர் அல்ஹாஜ் எம் ஜே முஹம்மது இக்பால் தான் ETA நிறுவனத்திற்கு நேர்முகத்தேர்வுக்கு வரும்போது காக்கா அவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களை விவரித்தார். மிகவும் எளிமையுடன் காணப்பட்ட காக்கா பற்றி பெருமிதம் கொண்டார்.

அனைத்து ஜமாஅத்கள் சார்பில் உரை நிகழ்த்திய லெப்பைக்குடிக்காடு அன்வர் பாஷா அவர்கள் ( Executive Director, ETA M&E Division, Dubai )
ETA நிறுவனம் துவங்கிய போது பணிக்குத் தெரிவு செய்ய்யப்பட்ட நூறு பேரில் 30 பேர் லெப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து அமீரக ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலவி குத்புதீன், அபுதாபி அய்மான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் காதர் பக்ஷ் ஹ¤சைன் சித்திக்கீ, குவைத் பள்ளி இமாம் மெளலவி காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பயீ உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

தேசிய விருதாளர் புலவர் முஸ்தபா தனது உரையில் காக்கா அவர்களின் நேரந்தவறாமை குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஸலாஹ¤த்தீன் காக்கா அவர்கள் அறிவாளர், உழைப்பாளர், பண்பாளர் என்றார். தாய், தந்தையரின் சொற்களுக்கு பெரிதும் மதிப்பு கொடுத்து உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்றார்.

ஏற்புரை நிகழ்த்திய அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤த்தீன் அவர்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றார். பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் வாழ்ந்து வந்தாலும் வளைகுடாவைச் சேர்ந்த நம்மைப் போன்றவர்கள் தான் தாயகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையான பணிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். பல்வேறு ஜமாஅத்தினரும் தங்களது ஊருக்குத் தேவையான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவது குறித்து பெருமகிழ்வு அடைவதாகக் குறிப்பிட்டார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களது பெருமையை உணர்ந்த அரசு அவர்களுக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தி அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் தான் சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்க்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார். தன்னால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவை இன்னும் சிறப்புற ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் தெரிவிக்க கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஈமான் அமைப்பு சார்பாகவும், முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர், காயல்பட்டணம், முதுகுளத்தூர், கோட்டக்குப்பம், வண்ணாங்குண்டு, கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு ஜமாஅத்கள் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் அப்துல் கத்தீம் நிறைவுரையாற்றினார். காயல்பட்டணம் மெளலவி சுலைமான் லெப்பை ஆலிம் மஹ்ளரி அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. தேரிழந்தூர் தாஜுதீனின் வாழ்த்து கீதமும் இடம்பெற்றது.

நிகழ்ச்சியில் ஈமான் சங்க நிர்வாகிகள், ETA ASCON நிறுவன ஊழியர்கள், பல்வேறு ஜமாஅத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.















































































No comments: