நாயகமே! நபி நாயகமே!
நாயகமே – எங்கள்
நபிகள் நாயகமே!
இறைவேதத்தின்
நிறைவாழ்வே!
காருண்யத்தின் முகவரியே!
ஒளிச்சுடர்களையும்
உயிர்ப்பிக்கும் ஒளிப்பொருளே!
வாழ்வையும் -
வாழ்வின்
அனைத்து நிலைகளையும்
உயிர்ப்பித்தவர்கள் நீங்கள்!
நரக நெருப்பின்
விளிம்பிலிருந்தவர்களையும்
சுவனத்தில் கைகொடுத்துத்
தூக்கியவர்கள் நீங்கள்!
எங்கள் ஆதார வித்தே!
ஈருலகுக்கும் உயிரான சொத்தே!
எங்களுக்கு
உங்கள் ஆதாரம் மட்டும்தான்
ஆதாரம்!
இல்லையென்றால்
இருமைகளும் அல்லவா
கருமைகளாகியிருக்கும்!
அந்தக் கருமைகள் சூழாமல்
அவைகளை அருமைகளாய் ஆக்கி
எங்களைக் காப்பவர் நீங்கள்
ஒளிபூக்கும் ஈமான் உள்ளத்தில்
உயர்வாகப் பூப்பவர் நீங்கள்!
எங்கள்
ஈருலகங்களும்
உங்களால் சிறந்தன
ஏனெனில் நாங்கள்
உங்கள் ‘உம்மத்துக்கள்’
இந்த இறைக்கருணை
அரும்பெரும் பாக்கியமல்லவா!
விழிகளையே
திருடிக்கொள்பவர்களுக்கு மத்தியில்
ஒளிவிளக்காயிருப்பவர் நீங்கள் மட்டும்தான்!
இதயங்களையே
தொலைத்தவர்களுக்கு மத்தியில்
உதயங்களைத் தந்தவர்
நீங்கள் மட்டும்தான்!
இரத்தம் உண்ணும்
ஈரக் குலைகளை
சுத்தப் படுத்தியது
உங்கள் மன்னிப்பு எனும்
‘ஜம்ஜம்’ மட்டும்தான்!
அழுக்கடைந்த
‘ஹஜருல் அஸ்வத்’
சுவனக்கல்லும்
மகிமைப்பட்டது
உங்கள் கரங்கள் தொட்டுத்தான்!
மண்ணும் மறுதலிக்கும்
மனித மிருகங்களை
உங்கள் ஏகத்துவம் மட்டும்தானே
ஏற்றுக் கையளித்தது?
பெண்சிசுவை மண்மூடும்
பெருங்கொடுமைகள் எல்லாம்
உங்கள் காலடிகளில்தானே
காணாமல் போனது!
உங்கள்
கண்ணீர்த்துளிகளில் அல்லவா
உங்கள் உம்மத்துக்களாம்
எங்கள் உள்ளக்கறைகள்
கழுவப்பட்டன?
எங்கள்மேல்
அறையப்பட்ட ஆணிகளையெல்லாம்
உங்களின்
விரிந்த கர இறைஞ்சுதல்களல்லவா
பிடுங்கி எறிந்தன?
உங்கள்மீது மொழியும் அழகான
சலவாத்துக்களில்
எங்கள் ஆன்மா
பரிசுத்தப்படுத்தப்படுகிறது!
உங்கள் சுன்னத்துக்களில்
எங்கள் ஜன்னத்துக்கள்
அலங்கரிக்கப்படுகின்றன!
உங்கள்
பாதத் துகள்களின்கீNழு
எங்களுக்குப் பால் நதிகளும்
தேன் நதிகளும் பிறக்கின்றன!
உங்கள் பார்வைகளில்
எங்கள் பாவங்கள் மறைகின்றன!
உங்கள் ஒளிர்மைகள் - எங்கள்
இருட்டுக்களின் அழுக்குகளைக்
களைந்து விடுகின்றன!
உங்கள் கனிவுகள்
எங்கள் கவலைகளைக்
கழற்றி விடுகின்றன!
அகில முழுமைக்குமே
அருட்கொடையாக
அனுப்பப்பட்டவர்களல்லவா நீங்கள்?
மானுடம் முழுமைக்கும்
நீங்கள் மட்டும்தானே
முன்மாதிரியாக முன்மொழியப்பட்டீர்கள்?
உங்கள்
மேனியிலிருந்து வழிந்த
வியர்வை முத்துக்களில்
எங்கள் சுவனக் கூலிகள் அல்லவா
நிச்சயிக்கப்பட்டன?
நீங்கள்
எட்டிநடந்த
ஒவ்வொரு எட்டிலும்
எங்கள் பாதைகள் அல்லவா
செப்பனிடப்பட்டன?
உருக்குலைந்துபோன
படைப்பினங்களை
ஒழுங்குபடுத்த வந்தவர்களில்
உங்களைப்போல்
முழுமையானவர் யாருமே இல்லை!
இந்த
அத்தாட்சிப் பத்திரங்களை
அன்று இறைவன் சொன்னான்
இன்று
உலகம் சொல்கிறது!
இனிவரும்
நாளும் சொல்லும்
உங்கள் வழியேதான்
அனைத்து உலகமும் செல்லும்!
ப.அத்தாவுல்லா
அருஞ்சொற்பொருள்:
உம்மத்துக்கள்-சமுதாயம், சுன்னத்துக்கள்-வழிமுறைகள், ஜன்னத்துக்கள்-சுவர்க்கம், ஸலவாத்து-நபிவாழ்த்து, ஜம்ஜம்-வற்றாத புனித நீரூற்று(மக்காவிலுள்ளது), ஹஜருல் அஸ்வத்-கஅபாவில் உள்ள சுவனக்கல், இருமை-இம்மை-மறுமை
No comments:
Post a Comment