Monday, December 8, 2008

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை, டிச. 8: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்பட்ட, குரூப்-1 பிரதான எழுத்துத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி. மற்றும் கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் 172 பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பிரதான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்கள் 1:2 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நேர்முகத் தேர்வுக்கு 349 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களின் பட்டியலை தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.

இந்த விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.

எழுத்துத் தேர்வில், வினாத்தாள் குளறுபடி உள்ளிட்ட சில காரணங்களால் 30 பேர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவர்களுக்குத் தனியாக தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு பெற்றவர்களின் பட்டியலும் இத்துடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு குறித்த அழைப்புக் கடிதங்கள் தேர்வு பெற்றவர்களுக்கு தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், இத் தேர்வுகள் டிசம்பர் 26 முதல் ஜனவரி 3-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

No comments: