Thursday, January 8, 2009

உயர்கல்வி மேம்பாட்டுக்கு சிறப்பு நடவடிக்கை:கல்லூரிகளுக்கு தர அங்கீகாரம் கட்டாயம்

உயர்கல்வி மேம்பாட்டுக்கு சிறப்பு நடவடிக்கை:கல்லூரிகளுக்கு தர அங்கீகாரம் கட்டாயம்
பல்கலைக்கழக மானியக்குழு புதிய உத்தரவு


சென்னை, ஜன.9-

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தர அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) புதிய உத்தரவை விரைவில் பிறப்பிக்க உள்ளது.

உயர் கல்வி நிலை

இந்தியாவில் 417 பல்கலைக்கழகங்களும், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளும் உள்ளன. இதில் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

வெறும் 7 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிப் படிப்பை முடித்து விட்டு உயர்கல்விக்கு செல்கிறார்கள். இந்த எண்ணிக்கையை குறைந்தபட்சம் 12 சதவீதமாக உயர்த்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டு புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, கல்லூரி மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்கும்.

தர அங்கீகாரம் கட்டாயம்

உயர்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் அதே வேளையில் கல்வியும் தரமாக இருக்க வேண்டும் என்பதிலும் அரசு உறுதியாக உள்ளது. தற்போது பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் தேசிய தர மதிப்பீட்டுக் கவுன்சில் (நாக்) ஏ, ஏ பிளஸ், பி பிளஸ் என்று பல்வேறு நிலைகளில் தர அங்கீகாரம் (அக்ரெடிட்டேஷன்) வழங்கி வருகிறது. இந்த தர அங்கீகாரத்தை வைத்து அந்த கல்வியின் மதிப்பு கூடுகிறது.

இப்போது, கல்வி நிறுவனங்கள் தர அங்கீகாரம் பெறுவது கட்டாயமில்லை. அவற்றின் விருப்பதைப் பொறுத்தது. இந்த நிலையில், நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தர அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்கும் வகையில் யு.ஜி.சி. விரைவில் புதிய உத்தரவை பிறப்பிக்க உள்ளது.

உதவித்தொகை நிறுத்தப்படும்

இதுபற்றிய அறிவிப்பு இன்னும் 3 மாதத்தில் வெளியிடப்படும். நிர்ணயிக்கப்படும் காலக்கெடுவுக்குள் தர அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களுக்கு நிதி உதவி உடனடியாக நிறுத்தப்படும் என்று யு.ஜி.சி. தலைவர் சுகதேவ் தோரட் அறிவித்திருக்கிறார். தற்போது 24 சதவீதம் கல்லூரிகளும், 30 சதவீத பல்கலைக்கழகங்களும் மட்டுமே தர அங்கீகாரம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய உத்தரவின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் 3 ஆண்டுகளில் நாக் உள்ளிட்ட ஏதாவது ஒரு தர அமைப்பிடமிருந்து தர அங்கீகாரம் பெற வேண்டும். கல்வித்தரம், உள்கட்டமைப்பு வசதி, தரமான ஆசிரியர்கள், ஆராய்ச்சி வசதி, விடுதி வசதி உள்பட பல்வேறு விதிமுறைகளின் அடிப்படையில் இந்த தர அங்கீகாரச்சான்று வழங்கப்படும். நிதி உதவி பெறாத கல்வி நிறுவனங்களுக்கு மேற்கண்ட வசதிகளை மேம்படுத்திக்கொள்ள யு.ஜி.சி. ஒருதடவை நிதி உதவி அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: