துபாய் ஈமான் அமைப்பு நடத்திய மானுட வசந்தம் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது பங்கேற்று இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
துபாய் ஈமான் அமைப்பு மானுட வசந்தம் நிகழ்ச்சியினை 27.02.2009 வெள்ளிக்கிழமை மாலை இந்திய கன்சுலேட் அரங்கில் நடத்தியது.
மானுடவசந்தம் நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் செய்யது எம். ஸலாஹுத்தீன் தலைமை வகித்தார்.
ஹாபிஸ் முஹம்மது இப்ராஹிம் இறைவசனங்களையும், அதன் தமிழ் மொழியாக்கத்தை ஈமான் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் வாசித்தார்.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்கள் எம்.அப்துல் கத்தீம், ஏ. அஹமது முஹைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.
லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் துவக்கவுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மானுட வசந்தம் நிகழ்ச்சி துபாயிலும் ஈமான் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டு சகோதர சமுதாய மக்கள் இஸ்லாம் குறித்த தங்களது ஐயப்பாடுகளுக்கு உரிய விளக்கத்தை டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள் மூலம் பெற வேண்டும் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாம் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் மனங்களால் ஒத்தவர்கள். மனிதநேயத்தை வலியுறுத்தாத சமுதாயம் இல்லை. இதனைப் புரிந்து கொண்டு நாம் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து செயல்பட இந்நிகழ்ச்சி பெரிதும் உதவும் என்ற நன்னோக்கில் துபாய் ஈமான் அமைப்பு இம்மானுட வசந்தம் நிகழ்ச்சியினை தங்களுக்கு வழங்குகிறது.
ஈமான் அமைப்பின் கல்விக்குழுத்தலைவர் பி.எஸ்.எம்.ஹபிபுல்லாஹ், இந்து சமுதாயத்தின் பிரதிநிதியாக வெங்கடாச்சலம் ராமசாமி குருக்களும், கிறிஸ்தவ சமுதாயத்தின் சார்பாக அருட்தந்தை பால் ரிச்சர்ட் ஜோசப் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் அவர்கள் தனது வாழ்த்துரையில் டாக்டர் கே.வி.எஸ். அவர்களை தொலைக்காட்சி மூலம் பார்த்து வந்த நான் இன்று நேரில் பார்க்கும் வாய்ப்பை ஈமான் அமைப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இன்றைக்கு திருமணத்தின் போது வரதட்சணை ஒரு முக்கியப் பிரச்சனையாக இருந்து வருகிறது. தான் துபாய் ஈடிஏ அஸ்கான் ஜாய்ண்ட் மேனேஷிங் டைரக்டராக இருந்து வருகிறேன். இதில் சுமார் 85,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். ஒரு முஸ்லிம் நிறுவனமாக இருந்தாலும் இங்கு அதிகமாக சகோதர சமுதாயத்தவரே அதிகம் பணிபுரிந்து வருகின்றனர். நம்மிடையே உள்ள நல்லிணக்கம் கலவரம் மற்றும் வெறி மாறுவதற்கு காரணம் என்ன என்பதனை டாக்டர் அவர்கள் தனது கேள்வி பதில் நிகழ்ச்சியில் தெளிவு படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
இந்து சமுதாயப் பிரதிநிதியாகப் பங்கேற்ற பாலக்காடு வெங்கடாச்சலம் ராமசாமி குருக்கள் அவர்கள் தனது உரையில் மானிடப்பிறவியானது ஆண், பெண் என இரு சாதிகளைக் கொண்டது. மானிட வர்க்க உயர்வுக்கு இயற்கையின் மீது பிரியம் கொள்ள வேண்டும். மனிதனால் கண்டறியமுடியாத ஒரு சூப்பர் பவர் சக்தி அதுவே கடவுள். மார்க்கங்கள் பலவாக இருந்தாலும் நொக்கம் யாவும் ஒன்றே. இன்றைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை குறித்து கவலை கொள்ளாது உறுதியான நம்பிக்கையுடன் இறைவனைப் பிரார்த்தித்து கடினமாக உழைத்தால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்கள் வாழ்வில் வசந்தம் ஏற்பட இந்ந மானுட வசந்தம் நமக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.
கிறிஸ்தவ சமுதாயப் பிரதிநிதியாக பங்கேற்ற பால் ரிச்சர்ட் ஜோசப் மனிதநேயக் கருத்துக்களை வழங்கி வரும் மானுட வசந்தம் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது அவர்களுக்கும், இத்தகைய நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த ஈமான் சங்கத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு பி.எஸ்.எம்.ஹபிபுல்லாஹ், எம். அப்துல் கத்தீம், ஏ. அஹமது முஹைதீன், ஈடிஏ அஸ்கான் ஹெச்.ஆர்.எம். எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம்.அக்பர் கான், சம்சுதீன் காக்கா உள்ளிட்டோர் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
ஈமான் அமைப்பின் தலைவர் செய்யது எம். ஸலாஹுத்தீன் அவர்கள் ஈமான் அமைப்பின் சார்பில் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களுக்கு நினைவுப் பரிசை வழங்கி கௌரவித்தார். தனது வாழ்த்துரையில் இறைவன மனிதனுக்கு பணத்தை வழங்கியதும் அவனைப் புகழ்கிறான். ஆனால் வசதிக்குறைவாகப் படைத்ததும் அவனை இகழ்கிறான். எனவே பணம் இறைவனிடம் வந்த ஒரு சோதனைப் பொருள் எனபதனை உணரந்து வாழவேண்டியதன் அவசியத்தை ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
மானுட வசந்தம் நிகழ்ச்சியின் நெறியாளர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது அவர்கள் மானுட வசந்தம் நிகழ்ச்சி குறித்தும், அதன் நோக்கம் குறித்தும் விவரித்தார். ஈமான் என்றால் நம்பிக்கை, இறைநம்பிக்கை எனப் பொருள்படும். அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரர்களாகிய துபாய் ஈமான் அமைப்பினர் இந்திய சமுதாயத்தினர்க்காக பல்வேறு கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது தன்னமில்லாத பணியினைப் பாராட்டி வாழ்த்துவதோடு பிரார்த்திக்கிறேன்.
பிரவாசி என்றால் வெளிநாடு வாழ் இந்தியர். வெளிநாடு வாழ் இந்தியர்களது முதலீட்டைக் கவர மாநாடு நடத்துகிறார்கள் எனில் அங்கு ஜனாதிபதியும் இருப்பார். பிரதமரும் இருப்பார். இதிலிருந்து வெளிநாடு வாழ் இந்தியரது முக்கியத்துவத்தை உணரலாம். பிறந்த நாட்டுக்காகவும், புகுந்த நாட்டுக்காகவும் தங்களது உன்னதமான உழைப்பினை அளித்து வரும் உங்களைப் பாராட்டுகிறேன்.
இந்திய வளர்ச்சிக்கு நீங்கள் காட்டி வரும் அக்கறை தொடர வாழ்த்துகிறேன்.
குருக்கள் அவர்கள் தனது பாலக்காட்டுத் தமிழிலே பொருளாதாரப் பின்னடைவு குறித்து குறிப்பிட்டார்கள். பொருளாதார நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு செய்து இந்நிலைக்கு காரணம் என்ன என்பதனைக் கூறவேண்டியது அவர்களது கடமையாகும்.
மோதல்கள் ஏன் ஏற்படுகிறது. நமக்குள் பேசிக்கொள்ளாததன் காரணமாகவே ஏற்படுகிறது. கணவன் மனைவியுடனும், தகப்பன் பிள்ளையுடனும், இரண்டு சமுதாயத்தினர் ஒருவருக்கொருவரும் பேசிக்கொண்டால் பிரச்சனை தீர்க்கப்படும்.
கணவன்,மனைவி எப்பொழுது பேசுகின்றனர் என்றால் தொலைக்காட்சித் தொடரின் போது கமர்ஷியல் பிரேக் விடும் போது தான் பேசுகின்றனர். கணவன், மனைவி இருவரும் சில இல்லங்களில் பணிக்குச் செல்கின்றனர். இதனால் பிள்ளைகளுடன் பேசுவதற்கான நேரம் கிடைப்பதில்லை.
மானுட வசந்தம் நிகழ்ச்சியின் நோக்கமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது தான். எனவே ஈகோவைக் களைந்து விட்டு ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேச வேண்டும்.
இங்கே என்ன நிகழ்கிறதென்றால் கலவரத்திற்குப் பின்னர் தான் இரு சமுதாயத்தவர் பேசுகின்றனர். அதற்கு முன்னரே இவர்கள் பேசியிருந்தால் இதுபோன்ற நிகழ்வுகள் தடுக்கப்பட்டிருக்கும்.
மனிதனுக்குத் தேவை வாழ்வாதாரமும், வழிகாட்டு நெறியும். எந்த மனிதனும் கோட்பாடு இல்லாமல் வாழமுடியாது. மனிதனைப் படைத்த இறைவன் அவன் நிம்மதியாக வாழவேண்டும் அதன் மூலம் மனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் முதல் மனிதராகிய ஆதத்தையே முதல் தூதராக ஆக்கியருளினான்.
இஸ்லாம் என்றால் அமைதி இதனைப் பின்பற்றினால் நேர்வழி கிடைக்கும். ஒரு மனிதனுக்கு அமைதி கிடைத்தால் உலகில் அவனுக்கு இதனைவிட மிகப்பெரிய சொத்து எதுவும் இருக்க முடியாது.
தனவந்தவர்களை விட அன்றாடங்காச்சியாக இருக்கக்கூடியவன் படித்தவுன் நிம்மதியாக உறங்கிவிடுகிறான். இஸ்லாத்தை பின்பற்றினால் மனிதனுக்கு அமைதி கிடைக்கும் என இறைவன் வாக்களிக்கிறான். சில கோட்பாடுகளில் தனி மனித அமைதி குறித்தும், சிலவற்றில் சமுதாய அமைதி குறித்தும் கூறுவார்கள். ஆனால் இஸ்லாம் இவ்விரண்டையும் போதிக்கிறது.
நெஞ்சுக்கு நீதி செலுத்த வேண்டும். ஆன்மாவுக்கு தீங்கிழைத்தல் கூடாது. சமுதாய உணர்வுகளை, உரிமைகளை காயப்படுத்தக்கூடாது. அநீதிகள் ஒழிக்கப்பட வேண்டும்.
மானுட வசந்தம் நிகழ்ச்சி கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொலைக்காட்சியின் வாயிலாக தமிழ் கூறும் நல்லுலகிற்கு மனிதநேயக் கருத்துக்களை வழங்கி வருகிறது. அமைதி பெறுக ! அமைதி தருக ! எனக்கூறி மானுட வசந்தம் நேயர்கல் கேட்ட கேள்விகளுக்கு விரிவான, விளக்கமான பதிலை வழங்கினார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது.
ஈமான் அமைப்பின் ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்திய கன்சுலேட் அரங்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் குழுமியிருந்தனர். பெண்களும் அதிக அளவில் ஆர்வமுடன் வந்திருந்தனர். பலர் இடம் கிடைக்காமல் திரும்பிச்சென்றனர்.
சக்தி எஃப்.எம், வானொலி, ஆசியாநெட் வானொலி, தட்ஸ்தமிழ்.காம், தினமலர் வெளிநாட்டு வாழ் இந்தியர் செய்திகள், அதிகாலை.காம், ஈமான்டைம்ஸ் கூகுள் குரூப், முதுவைவிஷன்.காம்,காயல்பட்டணம்.காம்.காயல்பட்டணம்.இன், தனிநபர் வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் மக்களுக்கு செய்திகள் அதிக அளவில் சென்றடைந்ததும் இதற்குக் காரணம்.
செய்தித் தொகுப்பு : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )
No comments:
Post a Comment