Thursday, February 26, 2009

சமுதாய விடியலுக்காக தொடரும் ஈமான் கல்வி சேவை

சமுதாய விடியலுக்காக தொடரும் ஈமான் கல்வி சேவை

கல்வி உலக சமுதாய அறிவுக் கண்களை திறக்கச் செய்யும் திறவுகோல். நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். (அல் குர் ஆன் 16.43 )

கல்வி அறிவைத் தேடுவது தொட்டிலிலிருந்து மரணிக்கும் வரை என்றார்கள் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள். ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் கல்வி கற்பது கட்டாயக் கடமை என இஸ்லாம் வலியுறுத்துகிறது இஸ்லாம் கல்வி அறிவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது கல்வியறிவு இல்லாத எந்த சமுதாயமும் தன்மானத்தோடும் தன்னம்பிக்கையோடும் வாழ்ந்து சிறக்க முடியாது என்பதை அனுபவ பூர்வமாக கண்டு வருகிறோம்.

இஸ்லாம் கல்விக்கு கண் தந்த அரிய பொற்காலம் வெறும் நினைவு தூண்களாக காட்சி அளிக்கின்றன நம் பெற்றோர்களின் கல்வியின்மையால் நாமும் கல்வியிழந்து நம் சந்ததிகளையும் கல்வியூட்டும் ஞானமின்றி மற்ற சமுதாயங்களைவிட 200 வருடங்கள் கல்வியறிவில் பின் தங்கிய நிலையில் இருக்கின்றோம் இஸ்லாமிய வரலாற்றைப் பார்க்கும் போது அதிகளவில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் இடைக்காலத்தில் கல்வியைப் பற்றிய எந்தவித சிந்தனையும் கவலையும் இன்றியும் அது ஒரு அழியாச் செல்வம் என்பதை மறந்த நம்மில் பலர் சொத்து சேர்ப்பதிலும் ஆடம்பர வாழ்க்கையிலும் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

சீன தேசம் சென்றாகிலும் சீர்கல்வி கற்றுக் கொள்ளுங்கள் என உலக மனித குலத்தின் வாழ்வியல் ஆசானாகப் பிறந்த அண்ணல் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் கல்வியின் அவசியத்தை உலக மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள் இப்படி கல்விக்கு கண் தந்த இஸ்லாமிய வரலாற்றை ஒட்டியே தொடங்கப்பட்ட ஈமானின் கல்வித் திட்டம் முதல் ஆக்கமும் ஊக்கமளிக்கும் எந்த ஓர் திட்டங்களும் இறைத்தூதர்களின் வழியாகவும் தொடர்ந்து வருபவை என்கின்ற உண்மையை நாம் முதலில் தெளிவாக உணர வேண்டும்.

இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழகம் வாழ்முஸ்லிம்கள் அனைத்து துறைகளிலும் மிகவும் பின் தங்கிய நிலைக்கு காரணம் கல்வியின்மை தான் என்ற உண்மையை உண்ர்ந்த வளைகுடா வாழ்க்கையின் அனுபவமும் தொலைநோக்கு சிந்தனையும் சமுதாய பற்றும் உள்ள எங்களது தனி மரியாதைக்குரிய ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் அவர்கள் (MANAGING DIRECTOR E.T.A. ASCON GROUP OF COMPANIES) வளைகுடா நாடுகளில் வியர்வை சிந்த உழைக்கும் நம் சகோதரர்கள் ஆடம்பர வாழ்க்கையில் கவனம் செலுத்தாமல் தன் பிள்ளைகள் தன் சகோதர சகோதரிகள் உறவினர்கள் ஆகியோரை கல்வி அறிவு பெற்றவர்களாகவும் பட்டதாரிகளாகவும் மாற்றுவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் வாய்ப்பு வசதிகள் இல்லை என்ற ஆதங்கம் நம்மிடம் ஒரளவு இருந்தாலும் பெருவாரியான முஸ்லிம்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துவதுமில்லை என்ற தனது ஆதங்கத்தை பல சூழ்நிலைகளில் தெரியப்படுத்தியுள்ளார்கள்.1991 ஆண்டின் புள்ளியில் கணக்கெடுப்பு விபரப்படி 52.2% ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 2001 ஆண்டில் 65.38%ஆக உயர்வு அடைந்தது ஆனால் இதில் முஸ்லிம்கள் எழுத்தறிவு 59.1% மட்டுமே ஆகும்.

காலத்தின் கட்டாயத்தை உணர்ந்த ஈமான் நிர்வாகம் 1991 ஆம் ஆண்டு முதல் முயற்சியாக ஒரு மாணவிக்கு பொறியியல் கல்விக்கு உதவித்தொகை வழங்கியது இதன் தொடர்ச்சியாக வல்ல அல்லாஹ்வின் பெரும் கிருபையாலும் ஈமான் கல்விக்குழுவில் தந்தை என்று ஈமான் கல்விக்குழுச் சகோதரர்களால் கண்ணியத்துடன் போற்றப்படும் E.T.A அஸ்கான் நிறுவன குழுமத்தின் கார்ஸ் இணை நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் P.S.M ஹபீபுல்லாஹ் அவர்கள் தலைமை பொறுப்பேற்று வழிநடத்துவதுடன் ஈமான் கல்விப்பணியானது சமுதாய விடியலுக்கான ஆக்கப்பூர்வமான சேவை என்று உணர்ந்து அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் M.அப்துல் ரஹ்மான்,பொதுச்செயலாளர் அல்ஹாஜ் A. லியாக்கத் அலி, இவர்கள் ஊக்கமளித்து வந்ததன் காரணத்தால் இன்று வரை உயர் கல்வி பெற்ற மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்து உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! முன்னாள் பொதுச்செயலாளர் என்ற பொறுப்போடு கல்விப்பணியையும் சிறப்பான முறையில் செயல்படுத்தி காட்டிய அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் அவர்களின் சீரிய பணிகளுடன் முன்னாள் கல்விக்குழுச் செயலாளரும், இந்நாள் பொதுச்செயலாளருமான அல்ஹாஜ் A.லியாக்கத் அலி அவர்களின் இணைந்த அணுகு முறைகளுடன் கூடிய இவர்களின் சீரிய செயல்பாடுகள் ஈமானின் கல்விப்பணியில் தனி முத்திரையை பதித்தது என்றால் அது மிகையாகாது.

அல்லாஹ்வின் பெரும் கிருபையால் கல்விக்குழுச் செயலாளர் அல்ஹாஜ் A . லியாக்கத் அலி அவர்களின் வழியில் செயலாளர்கள் பொறுப்பில் நானும் A . முஹம்மது நூர்தீன் அவர்களும் சில வருடம் பணியாற்றி பின் பணி நிமித்தம் காரணமாக அமெரிக்கா சென்றவுடன் கல்விக்குழுச் செயலாளர்கள் பொறுப்பை நானும் U. முஹம்மது ஹிதாயத்துல்லா அவர்களும் ஏற்று செயல்பட்டு வருகிறோம்.

பல பொது இயக்கங்களும் கல்விப்பணி செய்வதை நாம் அறிந்திருக்கின்றோம் ஆனால் நமது ஈமான் கல்விப்பணியை துடிப்புடன் ஒரு இயக்கமாகவே நடத்தி செல்லும் விதம் அனைவர்களின் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளது கல்விக்குழுச் சகோதரர்களுடன் தோளோடு தோள் நின்று களப்பணியாற்றி அதன் வெற்றிக்கு பெரும்பங்கு வகுத்த செயல்மிக்க முன்னாள் கல்விக்குழுச் செயலாளரும் ஈமானின் இன்றைய பொதுச் செயலாளருமாகிய அல்ஹாஜ் A . லியாக்கத் அலி அவர்கள் கல்விப் பித்தராகவே மாறி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான கல்வி தாகம் கொண்டவர்களாக எங்களைப் போன்றவர்களை இன்றும் வழிநடத்தி கல்வியில் மிகுந்த ஈடுபாடுடன் தன்னை முழுமையுடன் உண்மையாகவே அர்ப்பணித்து அதே போல் மற்றவர்களையும் கல்விக்குழுச் சேவையில் ஈடுபாடு கொள்ள தொடர்ந்து சேவையாற்றி வருகிறார்கள் அவர்கள் பொறுப்பில் இருந்த போது கல்விக்குழுப் பணிகளில் நடந்த சில சம்பவ நிகழ்வுகளை இந்த நேரத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஈமான் கல்விச்சேவையில் துபாயில் வாழும் அனைத்து சகோதரர்களின் பங்கும் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் தொடர்ந்து பல அலுவல்களுக்கிடையே நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் சமுதாய உடன் பிறப்புகளின் இல்லங்களுக்குச் சென்று பொருள் திரட்டுகிற பணியை பொதுச்செயலாளர் அல்ஹாஜ் A . லியாக்கத் அலி துணைத்தலைவர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் இவர்களின் நேரடி செயல்பாட்டில் ஒரு குழுவாகவே செயலாற்றிய விதமானது சமுதாயத்தின் மீது நேரடியான அக்கறையும் முன்னேற்றமும் மற்ற சகோதரர்களுக்கும் ஏற்பட வேண்டும் என்ற முனைப்பே ஆகும் அவரோடு அக்குழுவில் ( நாங்கள் இருவர் உள்பட) காயல் யஹ்யா மொய்தீன்,நைனார்பாளையம் சாதிக் பாட்சா, லெப்பைக்குடிக்காடு படேஷா பஷீர், பசுபதி கோவில் முஹம்மது ரபீக், குத்தாலம் அஷ்ரப் அலி, முஹம்மது முஸ்லிம், தோப்புத்துறை முஹம்மது நூர்தீன், மற்றும் இஸ்மாயில் ஹாஜியார் போன்றவர்களின் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு மூலம் என்றென்றும் மறக்க முடியாத நெஞ்சங்களாக காட்சி அளிக்கிறார்கள் அந்த மதிப்பு மிக்க உதவித்தொகைகள் மூலம் இன்று வரை கல்வி பயின்று வெளியேறியுள்ள மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 300 ஐத் தாண்டி உள்ளது இதில்,

பொறியியல் துறைகளில் - 70
மருத்துவம் -25
தொழில் நுட்ப மற்றும்
பாலிடெக்னிக் துறைகளில் -40
கலை மற்றும் அறிவியல்
சார்ந்த படிப்புகள் -80
பிற துறை சார்ந்த படிப்புகள் -85

என்று பல துறைகளிலும் மாணவ, மாணவியர்கள் தடம் பதித்து உள்ளது சிறப்புக்குரியது இதில் ஊனமுற்ற மாணவர்களும் உடல் நலிவுற்று வசதி வாய்ப்பற்ற பெற்றோர்களின் பிள்ளைகளும் உலமாக்கள் மற்றும் முஅத்தின் பிள்ளைகளும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஒவ்வொரு ஆண்டும் +2 பொது தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வு பெற்ற மேற்படிப்பைத் தொடர இயலாத ஏழை எளிய மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரி பத்திரிகைகளில் அறிவிக்கப்பட்டு அதற்கான உதவித்தொகை விண்ணப்பங்களும் இணைய தளம் / ஈமானின் மண்டல பிரதிநிதிகள் மூலம் அளிக்கப்பெற்று தேவையான சான்றிதழ்களுடன் கிடைக்கப்பெறுகிற விண்ணப்பங்கள் மாணவரின் மதிப்பெண் விபரங்கள் குடும்ப சூழ்நிலைகள் போன்ற விபரங்கள் கல்விக்குழுவின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு பின் தகுதியானவர்களின் தேர்வு விபரங்கள் ஈமான் கல்விக்குழுவின் அங்கீகாரம் பெற்ற தாயக பிரதிநிதிகள் திருச்சி. ஜமால் முஹம்மது கல்லூரி முனைவர் பேராசிரியர் எம்.எம்.சாகுல் ஹமீது. மற்றும் சென்னை தொழில் அதிபர் கீழக்கரை அன்வர் மைதீன் ஆகிய கல்வி ஆர்வலர்களுக்கு அனுப்பப்பட்டு நேரடி தேர்வுகளுக்கு பின் அவர்களின் உண்மை நிலவரங்களும் அறியப்பட்டு அவர்களுக்கான உதவித் தொகைகள் அளிக்கப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாயகம் சென்ற பொதுச்செயலாளர் அல்ஹாஜ். லியாக்கத் அலி அவர்கள் சென்னை மண்டல பிரதிநிதியுடன் நேர்முக தேர்வு நடைபெற்ற இடங்களுக்கு சென்று அவர்களின் குடும்ப சூழ்நிலைகள் மற்றும் மாணவ மாணவியர்களின் நேரடி விளக்கங்களை. மற்ற நிர்வாகிகளிடம் பகிர்ந்து கொண்டபோது அவர்களின் ஏழ்மை மற்றும் சூழ்நிலைகள் காண்பவர்கள் கண்களில் செந்நீரை வரவழைக்கும் என்பதில் எந்தளவும் சந்தேகங்கள் இல்லை.

ஈமான் கல்வித்திட்டத்தில் படிக்கும் மாணவ மாணவியர்களின் தேர்ச்சி விகிதங்கள் மற்ற ஈடுபாடுகள் வருகை பதிவுகள் போன்ற தகவல்கள் நேரடியாக கல்லூரியின் முதல்வர்கள் மூலம் கல்விக் குழுவிற்க்கு அளிக்கப்படுவதோடு அதன் அடிப்படையில் அவர்களுக்கு கல்விக்குழுத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் கல்விச் செயலாளர் முஹம்மது நூர்தீன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட மாணவர் நிலை அறியும் படிவம் ( IMAN STUDENT FEED BACK FORM ) அளிக்கப்பட்டு தொடர் உதவித் தொகைகள் மற்றும் சரியான ஆலோசனைகளும் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்ச்சி விகிதங்கள் மேம்பாடு அடைவதோடு இதன் மூலம் ஒவ்வொரு மாணவ, மாணவியர்களும் ஈமான் கல்விக்குழுவின் நேரடி பார்வையில் இருப்பதை அறிய முடிகிறது.

கல்விகுழுத் தலைவர் அவர்களின் விருப்பத்திற்கேற்ப, ஈமான் மாணவ, மாணவியர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் கடந்த 2002ஆம் ஆண்டில் முதன்முறையாக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, மற்றும் அய்மான் பெண்கள் கல்லூரிகளிலும் அதனைத் தொடர்ந்து சென்னை கிரஸெண்ட் பொறியியல் கல்லூரியிலும் நடத்தப்பட்டது இதில் ஈமானின் பொதுச்செயலாளர் அல்ஹாஜ் லியாக்கத் அலி, மற்றும் கல்விக்குழுச் செயலாளர்களும், அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முதுவை ஹிதாயத்துல்லா, தமிழக பிரதிநிதிகள் பேராசிரியர். எம்.சாகுல் ஹமீது பேரா. டாக்டர் பிலால், மற்றும் கல்லூரிகளின் முதல்வர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு கல்லூரிகளில் பயிலும் ஈமானின் மாணவ, மாணவிகளையும் சந்தித்து அவர்களுக்கு உரிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள் சென்னையில் சமுதாய ஆட்டோ ஓட்டுநரின் கல்வி ஊக்கத்தொகைக்கான நேரடி வேண்டுகோளை பரிசீலனை செய்து உடன் அதற்கான நடவடிக்கைகளை துரித கதியில் செயல்படுத்திய விதங்களை எண்ணும்போது சமுதாயத்தின் வளர்ச்சியில் ஈமானின் கல்விப்பணிகள் நல்லதோர் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது எனும் போது நமக்கு மனநிறைவு ஏற்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக 2004 ஆம் ஆண்டில் ஈமானின் பொதுச் செயலாளர் அல்ஹாஜ். குத்தாலம் லியாக்கத் அலி அவர்கள் வேலூர் சி.அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரியின் மாவட்ட விளையாட்டுப் போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு அங்கு பயின்று வரும் ஈமான் மாணவ, மாணவியர்களை சந்தித்து ஆலோசனைகளுடன் நல்ல பல அறிவுரைகளையும் வழங்கி வந்தார்கள்.

கடந்த 2005 ஆம் ஆண்டில் செயலாளர் என்ற முறையில் நானும், மற்றும் முஹம்மது நூர்தீன், இவர்களுடன் அல்ஹாஜ். அன்வர் மைதீன் ஆகியோரும் வேலூர் சி. அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரிக்குச் சென்று அங்கு பயின்று மென்பொருள் நிறுவனத்தில் நேரடி வேலைவாய்ப்பு தேர்வு பெற்று வேலைக்கான நியமன உத்தரவை பெற்ற ஈமான் உதவித்தொகை பெறும் மாணவியை வாழ்த்தியதோடு கால்லூரியின் தாளாளர் V.M.,லத்தீப் சாஹிப்,தலைவர் S. ஜியாவுத்தீன் அஹமது, மற்றும் கல்லூரி முதல்வர் ஜமீல் அஹமது ஆகியோருடன் இணைந்து மேலும் சிறந்து விளங்க நல்ல அறிவுரைகளை வழங்கி வந்தோம்.

ஈமான் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு ஆக்கப்பூர்வமான உற்சாகம் அளிக்கும் விதமாக நமது சமுதாய கல்லூரிகள் சென்னை கிரஸண்ட் பொறியியல் கல்லூரி, திருச்சி M.I.E.T பொறியியல் கல்லூரி / பாலிடெக்னிக், மதுரை சேது பொறியியல் தொழில் நுட்ப கல்லூரி, வேலூர் சி.அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரி, சென்னை தானிஷ் பொறியியல் கல்லூரி, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, அதிரை காதிர் முகைதீன் கல்லூரி, ராஜகிரி தாவூத் பாட்சா கலை அறிவியல் கல்லூரி, கீழக்கரை தாஸீம் பீவி பெண்கள் கல்லூரி, திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி, ஈரோடு அல் அமீன் பாலிடெக்னிக், கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் போன்ற சமுதாய கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு கல்வி ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரத்யேகமாக அந்தந்த பாடப் பிரிவுகளுக்கேற்ப இடங்களை தந்து உதவுகிறார்கள். என்பதை இந்த நேரத்தில் மிகுந்த நன்றியுடன் நினைவு கூறுகிறோம். சமுதாய கல்லூரி அல்லாது தகுதி அடிப்படையில் மற்ற கல்லூரிகளில் இடம் கிடைக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் துணை மருத்துவம், பத்திரிகை துறை, இந்திய ஆட்சி பணிகளுக்கான துறையில் கல்வி பெறுபவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது கல்விக்குழு தலைவர் P.S.M. ஹபிபுல்லாஹ், துணைத்தலைவர் அல்ஹாஜ். M. அப்துல் ரஹ்மான், பொதுச் செயலாளர் அல்ஹாஜ்.A.லியாக்கத் அலி ஆகியோர்களின் ஆலோசனையின்படி கடந்த சில ஆண்டுகளாக சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களையும் வருடா வருடம் தேர்வு செய்து கல்வி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறச்செய்து மதநல்லிணக்கத்திற்கு ஈமானின் கல்வித்துறை ஒரு முன் மாதிரியாக செயல்பட்டு வருகிறது.

இஸ்லாமிய சமுதாயம் கல்வியில் பெரிய அளவில் ஆர்வம் காட்ட வேண்டும் நமக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள முயற்சி செய்ய வேண்டும் தமிழகத்தில் நமது சமுதாயத்தினரால் நடத்தப்படுகின்ற கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளும் உள்ளன. ஆனால் ஆரம்ப கல்வி அளிக்கும் தொடக்கப்பள்ளிகள் தேவையான அளவில் இல்லாதது குறையாகவே உள்ளது நம் சமுதாயத்திற்கென்று தொடக்கப்பள்ளிகள் போதிய அளவு ஏற்படுத்த சமுதாய கவலை கொண்டவர்கள் கூட்டாக செயல்படவேண்டும்.

சமுதாய வளர்ச்சியில் அக்கறையும் கவலையும் கொண்ட தனி மரியாதைக்குரிய ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ்.செய்யது எம்.ஸலாஹுத்தீன் அவர்கள் மற்றும் கல்விக்குழுத் தலைவர் அல்ஹாஜ். P.S.M ஹபீபுல்லாஹ் இவர்களின் ஆலோசனைப்படி ஈமான் அமைப்பின் கல்விப்பணியின் ஓர் சிறப்பு அங்கமாக இன்ஷா அல்லாஹ் தமிழகத்தின் மத்தியப்பகுதியான திருச்சியில் ஈமான் மேல்நிலைப்பள்ளி ஒன்றை தங்கும் விடுதி வசதியுடன் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான இடம் வாங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த சிறப்புமிக்க பணிக்கு தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ள ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ். M. அப்துல் ரஹ்மான் , மற்றும் பலவகைகளிலும் தோளோடு தோள்நின்று ஒத்துழைப்பு அளித்து வரும் அமைப்பின் பொதுச்செயலாளர் அல்ஹாஜ். குத்தாலம் ஏ.லியாக்கத் அலி , துணைத் தலைவர்கள் அல்ஹாஜ். எம். அப்துல் கதீம், அல்ஹாஜ். அஹமது முஹைதீன், பொருளாளர். அல்ஹாஜ். மீரா முஹைதீன், அல்ஹாஜ். S.M. பாரூக் சடையன் அமானுல்லா, யஹ்யா முஹையதீன், சாதிக் பாட்சா, முதுவை ஹிதாயத்துல்லாஹ், அனைவர் களையும் ஈமான் கல்விக்குழு நன்றியுடன் நினைவு கூறுகிறது. மென்மேலும் முன்னேற்றம் காண, சமுதாய பற்று கொண்ட ஆர்வலர்களையும், நற்சிந்தனை கொண்ட புரவலர்களையும் ஈமானின் கல்விக்குழு இத்தருணத்தில் அன்போடு நினைவு கூறுகிறது.

இன்ஷா அல்லாஹ் ஈமானின் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் வெற்றி பெற எங்களின் அவாவும் துவாவும்.

( ஈமான் அமைப்பின் முப்பதாம் ஆண்டு சிறப்பு மலர் 2006 )

www.imandubai.org

No comments: